Comments

இந்தியா

ஆடம்பர திருமணங்களுக்கு தடை கர்நாடகம் வழி காட்டுகிறது!...

பெங்களுர்: மாநிலத்தில் ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ள மாநில அரசு, திருமணத்திற்கு 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டால் அபராதம் விதிப்பது உள்பட பல நிபந்தனைகள் அடங்கிய சட்டம் கொண்டுவருகிறது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை துணை மிகவும் அவசியமாகும். ஒருகாலத்தில் எளிமையான முறையில் நடந்த திருமணங்கள் தற்போது வசதிக்கு ஏற்ற வகையில் ஆடம்பரத்தை தொட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் லட்சம், கோடி என்ற வகையில் திருமணம் நடத்துகிறார்கள். அந்த திருமணங்களுக்கு செலவிடும் பணம் பலவழிகளில் வீணாகிறது. மேலும் திருமணத்தில் பரிமாறப்படும் பல வகையான உணவுகள் கூட மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் சரியாக சாப்பிடாமல் வீணாக்குகிறார்கள்.

நாட்டில் 30 கோடி மக்களுக்கு சரியான உணவு கிடைக்காமல் பசி, பட்டினியால் அவதிக்குள்ளாகிவரும் நிலையில், வசதிப்படைத்தவர்கள் ஆடம்பரம் என்ற வகையில் உணவை வீணாக்குகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் கையில் இருக்கும் பணத்தை வைத்து திருமணம் நடத்தாமல், கவுரம் என்ற ஒரு வார்த்தைக்காக கடன் வாங்கியாவது முடிந்த வரை ஆடம்பர திருமணம் நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை சாதாரணமாக எடுத்து கொண்டாலும், கடன் மூலம் வரும் தொல்லைகளால் பெரியளவில் சமூக பிரச்னை அடங்கியுள்ளது.

இதை தடுக்கும் நோக்கத்தில் மாநில அரசின் சார்பில் ஆடம்பர திருமண தடுப்பு சட்டம் கொண்டுவர முடிவு செய்தது. அதற்கான பணியிலும் முழுமையாக சட்ட துறையினர் ஈடுபட்டுவந்தனர். இதனிடையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகருமான கே.ஆர்.ரமேஷ்குமார், நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானத்தை மசோதா ரூபத்தில் தாக்கல் செய்தார். அது மாநில அரசு கொண்டுவர திட்டமிட்டிருந்த ஆடம்பர திருமண தடை சட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தது. ரமேஷ்குமார் தாக்கல் செய்துள்ள தனிநபர் மசோதாவில் ஆடரம்ப திருமணங்களை தடுக்க வேண்டும், திருமண மண்டபங்கள் வாடகை தொகையை ரூ.50,000 க்கு மேல் வசூலிக்ககூடாது, திருமணத்திற்கு 300 பேருக்கு மேல் அழைக்ககூடாது, இந்த எண்ணிக்கைக்கு மேல் கலந்துகொண்டால், மணமக்களின் பெற்றோரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும், திருமணத்தை கண்காணிக்க அரசு ஒவ்வொரு பகுதியிலும் தனி அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும்.

திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் பெற்றோர், திருமண தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பே திருமண பதிவு அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் மணமக்கள் பெயர், கல்வி, வேலை, சாதி, பிறந்த நாள், எந்த மண்டபம் அல்லது கோயிலில் திருமணம் நடக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அவரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். திருமண பதிவு அதிகாரி மணநாளில் நேரில் சென்று திருமணத்தை பார்வையிட வேண்டும், திருமணம் முடிந்த பின் ஒருமாதத்திற்குள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். திருமணத்தின் போது பரிமாறப்படும் உணவுகளை வீணாக்கக்கூடாது, அப்படி வீணாக்கினால் அபராதம் வசூலிக்க வேண்டும், கலப்பு திருமணமாக இருக்கும் பட்சத்தில் இரு குடும்பத்தினரின் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் என்பது உள்பட பல அம்சங்களை மசோதாவில் குறிப்பிட்டுள்ளார்.

 ஆடம்பர திருமணத்திற்கு தடை விதிக்கும் மாநில அரசின் முடிவு மக்கள் மத்தியில் விவாதம் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் தனிமனித உரிமையில் தலையீடுவதை அனுமதிக்க முடியாது. திருமணத்திற்கு 300 பேரை தான் அழைக்க வேண்டும் என்று நிர்பந்தம் விதிப்பது என்ன நியாயம்? நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா? அல்லது அடிமை தேசத்தில் வாழ்கிறோமா? என்ற கேள்வி பல தரப்பில் எழுகிறது.

அதே சமயத்தில் தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் ஆடரம்ப திருமணங்களுக்கு கடிவாளம் போடும் மாநில அரசின் முடிவு நியாயமானது. சமூகத்தில் ஏழை, பணக்காரர் என்ற ஏற்ற-தாழ்வு இதன் மூலம் விலகும் வாய்ப்பு ஏற்படும். திருமண செலவுகள் மீதான பொருட்கள் விலை குறையும் வாய்ப்பு ஏற்படும் என்பது ஓரு சாராரின் வாதமாகவுள்ளது. இந்நிலையில் கே.ஆர்.ரமேஷ்குமார் கொண்டுவந்துள்ள தனிநபர் சட்ட மசோதாவுக்கு உயிர் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.


 

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.