Comments

நோன்பு

நோன்பு எப்போது விதியாக்கப்பட்டது?நோன்பு எப்போது விதியாக்கப்பட்டது?இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது. மக்கா காலம் நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு அடித்தளம் இடும் காலமாக இருந்தது. உள்ளங்களில் ஏகத்துவத்தின் அடிப்படைகளையும் ஈமானிய பெருமானங்களையும் ஒழுக்கங்களையும் பதியச் செய்து நம்பிக்கை சிந்தனை, ஒழுக்கம், நடத்தை என்பவற்றில் படிந்துள்ள ஜாஹிலிய்யப் பதிவுகளை விட்டும் தூய்மைப் படுத்துவதாகவே மக்கா காலம் அமைந்திருந்தது.

ஆனால் ஹிஜ்ராவின் பின்னர் “ஈமான் கொண்டவர்களே! என்று அழைக்கப்படும் அளவுக்கு முஸ்லிம்கள் தனித்தன்மை வாய்ந்த கட்டுக்கோப்பான சமூக அமைப்பாக மாறிவிட்டனர். அப்போதுதான் மார்க்கக் கடமைகள் சட்டமாக்கப்பட்டன. சட்ட வரையறைகள் போடப்பட்டன. அச்சட்டங்கள் தெளிவுற விளக்கவும் பட்டன. அதிலொன்றுதான் நோன்பு.

மக்காவில் ஐவேளைத் தொழுகையைத் தவிர வேறெதுவும் சட்டமாக்கப்படவில்லை. தொழுகைக்கு தனியான முக்கியத்துவம் இருந்ததே அதற்கான காரணமாகும். அதாவது தொழுகை நுபுவத்தின் பத்தாம் ஆண்டில் இஸ்ரா பயணத்தின் போதுதான் கடமையாக்கப்பட்டது. அதிலிருந்து சுமார் ஐந்து வருடங்களின் பிறகு ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது. இதே ஆண்டில்தான் ஜிஹாதும் கடமையாக்கப்பட்டது. நபிகளார் மரணிக்கும் போது ஒன்பது ஆண்டுகள் றமழான் நோன்பை நோற்றிருந்தார்.

இது பற்றி இமாம் இப்னுல் கையிம் கூறும் போது, “உடல் தேவைகளை, அன்றாடப் பழக்கவழக்கங்களை விட்டும் மனித உள்ளங்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாக இருந்ததால்தான் நோன்பை சட்டமாக்குவது ஹிஜ்ராவுக்குப் பின் இஸ்லாத்தின் நடுப்பகுதிவரை பிற்போடப்பட்டது. மனித உள்ளங்களில் ஏகத்துவம், தொழுகையின் மீது நிலைபெற்று குர்ஆனின் ஏவல்களை ஏற்கப் பழகியபோது படிமுறை அடிப்படையில் நோன்பும் சட்டமாக்கப்பட்டது.” (ஸாதுல் மஆத் – பாகம் 2, பக்கம் 30)

நோன்பு சட்டமாக்கப்பட்ட கால கட்டங்கள்:

இரண்டு கட்டங்களாக நோன்பு சட்டமாக்கப்பட்டது. முதலாவது கட்டம் – முகல்லபின் தெரிவுக்குரிய காலகட்டம். அதாவது இரண்டிலொன்றை தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்த காலகட்டத்தைக் குறிக்கும். முகல்லப் சக்தியுள்ளவராயின் நோன்பு நோற்பதே மிகவும் சிறந்தது. இல்லாவிட்டால் பித்யாவுடன் நோன்பை விடமுடியும். பித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். அதற்கு மேற்பட்டோருக்கு உணவளித்தாலும் அது அவருக்கு நன்மையாகவே அமையும்.

இது பற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. “ஈமான் கொண்டவர்களே! நீங்கள் தக்வாவைப் பெறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்னால் இருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் ஒரு குறிப்பிட்ட காலம் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாக இருப்பவர் அல்லது பிரயாணத்திலிருப்பவர் அதனை வேறுநாட்களில் நோற்றுக் கொள்ளட்டும். நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் பித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும். மேலதிகமாக உணவளிப்பவருக்கு அது நன்மையாகவே அமையும். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது” (அல்பகரா 183-184) அதாவது விரும்பியவர் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் நோன்பை விட்டுவிட்டு பித்யா கொடுக்கலாம் என்பதே இவ்வசனம் உணர்த்தும் கருத்தாகும்.

கட்டாயமாக்கப்பட்ட காலப்பிரிவு:

இரண்டாவது கட்டம் – முன்னைய வசனம் வழங்கிய தெரிவுரிமை மாற்றப்பட்டு, நோன்பு கட்டாயமாக்கப்பட்ட காலத்தை இது குறிக்கும். இது தொடர்பாக பின்வரும் வசனம் இறங்கியது.

“அல்குர்ஆன் இறக்கப்பட்ட றமழான் மாதம், அது மனிதர்களுக்கு நேர்வழியாகவும் ஹுதாவையும் புர்கானையும் தெளிவுபடுத்தும் ஆதாரமாகவும் இருக்கின்றது. உங்களில் அத்தகைய மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாக அல்லது பிரயாணத்திலிருப்பவர் அதை வேறு நாட்களில் நோற்கலாம். அல்லாஹ் உங்களுக்கு இலேசையே விரும்புகின்றான். அவன் உங்களுக்கு கஷ்டத்தை விரும்பவில்லை. குறிப்பிட்ட கால நோன்பை நீங்கள் பூரணப்படுத்தவும் உங்களுக்கு வழிகாட்டிய அல்லாஹ்வை உயர்த்துவதற்குமே இவ்வாறு கூறுகின்றான். இதனால் நீங்கள் நன்றியுடையவர்களாக மாறலாம்.” (அல்பகரா 185)

ஸலமத் இப்னு அக்வஃ (றழி) அறிவிக்கும் புஹாரி முஸ்லிமில் பதியப்பட்டுள்ள ஹதீஸ் பின்வருமாறு “நோன்பு நோற்க சக்தியற்றவர்கள் பித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற வசனம் இறங்கிய போது விரும்பியவர்கள் நோன்பை விட்டுவிட்டு பித்யா கொடுத்துக் கொண்டிருந்தனர். இறுதியாக இதை அடுத்துள்ள ஆயத் இறங்கியதும் முன்னைய சலுகையை மாற்றிவிட்டது” (ஆதாரம் முத்தபக் அலைஹி – அல்லுஃலுஃவல் மர்ஜான் 702)


நோன்பின் வகைகள்

நோன்பு அதன் சட்ட அமைப்பைப் பொறுத்து பலவகைப்படும் அவற்றில் பர்ளான நோன்புகளும் உள்ளன. மேலதிக நோன்புகளும் உள்ளன. இன்னொரு வகையில் கூறுவதாயின் நோன்பில் வாஜிபானவை, முஸ்தஹப்பானவை, ஹராமானவை, மக்ரூஹானவை எனப்பல வகை உள்ளன.

வாஜிப் அல்லது பர்ளு என்பது பர்ளுஐனயே குறிக்கின்றது. அதாவது குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றுமாறு விதியாக்கப்பட்டதே வாஜிபாகும். அதுதான் றமழான் மாத நோன்பாகும். அவற்றில் அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய உரிமை என்ற வகையில் குறிப்பிட்ட காலத்துக்கு நோற்கப்படும் வாஜிபான நோன்பும் உண்டு. அவை குற்றப் பரிகாரங்களுக்கான நோன்பாகும். உதாரணமாக சத்தியத்தை முறித்தால், மனைவியை ளிஹார் செய்தால், தவறுதலாக கொலை செய்தால் குற்றப் பரிகார நோன்பு நோற்கப்பட வேண்டும். மேலும் ஒருவர் தானே தன்மீது விதித்துக் கொள்ளும் நோன்பும் வாஜிபில் அடங்கும். அது நேர்ச்சை நோன்பு எனப்படும்.

நாம் முதற் பிரிவாகிய ரமலான் மாத நோன்பை அதற்கு இஸ்லாத்திலும் முஸ்லிம்களின் வாழ்விலும் ஒரு மகத்தான முக்கியத்துவம் இருப்பதால் அதனை முதலில் விளக்குகின்றேன்.

ரமலான் நோன்பு இஸ்லாத்தின் தூன்

ரமலான்மாத நோன்பு ஒரு புனிதக் கடமை. இஸ்லாத்தின் மிகப்பெரிய வணக்க வழிபாடுகளில் ஒன்று. இந்த மார்க்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஐந்து இயங்கும் தூண்களில் ஒன்று.

இது வாஜிப் என்பதும் பர்ளு என்பதும் குர்ஆன், சுன்னா, இஜ்மா ஆகிய மூன்று மூலாதாரங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். “ஈமான் கொண்டவர்களே நீங்கள் தக்வாவைப் பெறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கியது போன்று உங்கள் மீதும் குறிப்பிட்ட காலம் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.” (அல்பகரா 183, 184)

அடுத்த வசனத்தில் பின்வருமாறு கூறுகின்றான். “றமழான் மாதம் அதிலேதான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் கொண்டதாக அல்குர்ஆன் இறக்கப்பட்டது.” (அல்பகரா 185)

புகழ்பெற்ற ஹதீஸ் ஒன்றை உமர் (றழி) பின்வருமாறு அறிவிக்கின்றார். “இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்று சான்று பகர்வதும் தொழுகையை நிலைநாட்டுவதும் சகாத்தை வழங்குவதும் றமழானில் நோன்பு நோற்பதும் சக்திபெற்றிருப்பின் அல்லாஹ்வின் ஆலயத்தில் ஹஜ் செய்வதுமாகும்.” (முஸ்லிம், அபுதாவூத், திர்மிதி, நஸாஈ)

இப்னு உமர் அறிவிக்கும் முஸ்லிம்கள் எல்லோரும் மனனமிட்டுள்ள இன்னொரு புகழ்பெற்ற ஹதீஸும் நோன்பு பற்றிக் கூறுகின்றது. இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது கட்டியெழுப்பப் பட்டுள்ளது என்று வரும் ஹதீஸில் அதில் ஒன்று றமழானில் நோன்பு நோற்றலாகும் (ஆதாரம் முத்தபக் அலைஹி)

அபூஹுறைரா (றழி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் “ஒரு நாட்டுப்புற அறபி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் செய்தால் சுவர்க்கம் செல்லக்கூடிய ஒரு சொல்லை எனக்குக் காட்டித்தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபிகளார் ‘அல்லாஹ்வுக்கு வழிப்படு, அவனுக்கு எதனையும் இணைவைக்காதே ….றமழானில் நோன்புவை” (ஆதாரம் முத்தபக் அலைஹி)

றமழான் நோன்பு குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளது. ஸஹீஹுல் ஸித்தாவும் ஏனைய ஹதீஸ் கிரந்தங்களும் அவற்றைப் பதிவு செய்துள்ளன. அவையனைத்தும் முதவாதிரான ஆதாரமாகவும் காணப்படுகின்றன. எல்லா சட்ட சிந்தனைப் பிரிவுகளையும் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் நுபுவத்திலிருந்து இன்று வரை எல்லாக் காலப்பிரிவுகளிலும் றமழான் நோன்பு வாஜிப் என்பதிலும் பொறுப்பேற்கும் தகுதிபடைத்த எல்லா முஸ்லிம்கள் மீதும் அது பர்ளுஐன் என்பதிலும் ஏகோபித்த கருத்துக் கொண்டுள்ளனர். அன்றும் இன்றும் இதுவிடயத்தில் யாரும் தனித்த கருத்துக் கொண்டிருக்கவில்லை.

இது முதவாதிரான ஆதாரங்கள் மூலம் நிறுவப்பட்ட பர்ளான கடமைகளில் ஒன்றாகும். இது தனியானதா பொதுவானதா என்று ஆராய வேண்டிய, ஆதாரம் தேடவேண்டிய அவசியமில்லாத மார்க்கத்தில் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய கடமைகளில் ஒன்றாகும்.

எனவேதான் றமழான நோன்பு கடமையில்லை என்றோ அல்லது அதில் சந்தேகம் கொள்ளவோ அல்லது அதை அற்பமாக நினைப்பதோ அனைவரையும் காபிர், அல்லது முர்தத் என்பதில் அனைத்து இஸ்லாமிய சட்ட அறிஞர்களும் தீர்ப்பளித்துள்ளனர். நோன்பை மறுப்பது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பொய்ப்படுத்திவிட்டார் என்பதைத் தவிர அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்பதைத் தவிர வேறு பொருள் கிடையாது.

இந்த விடயத்தில் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் காரணம் கற்பிக்க முடியாது. அப்படியானவர்கள் இருந்தால் அவர் மார்க்கத்தில் விளக்கம் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அறியாதிருந்தவற்றை அவர் அறிந்து கொள்ள வேண்டும். அது அவர் மீது கடமையாகும். அவ்வாறே அவருக்கு அறிய வைப்பதும் முஸ்லிம் சமூகத்தின் மீது குறிப்பாக அவருக்கு நெருங்கிய உறவினர் மீதும் கடமையாகும்.

About Unknown

0 comments:

Post a comment

Powered by Blogger.