Comments

நோன்பு

நோன்பின் விதிமுறைகள்


நோன்பின் விதிமுறைகள்




ரமழான் மாதம் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். இஸ்லாம் ஐந்து அடிப்படைக் கடமைகளில் நிறுவப்பட்டுள்ளது.

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வை தவிர வேறுயாரும் இல்லை. என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் தூதரென்றும் உறுதியாக நம்புவது தொழுகை நிலை நாட்டுவது, ஸகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது, ரமழானில் நோன்பு நோற்பது” (புஹாரி)

நோன்பு என்பது அல்லாஹ்வின் பால் நெருங்கும் எண்ணத்துடன் பஜ்ரு உதயமானதிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இன்னும் நோன்பை முறித்து விடக் கூடிய ஏனைய காரியங்களை விட்டும் விலகியிருப்பதாகும் ரமழான் மாதம் நோன்பு நோற்பது கடமை என்பது ஏகோபித்த முடிவாகும். அல்லாஹ் கூறுகிறான்.

“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாறோ அதில் அவர் நோன்பு நோக்கட்டும்” (2:185)

இது புத்தி சுவாதீனமுடைய, பருவ வயதை அடைந்த ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும்.

பருவமடைதல் என்பது 15 வயதை அடைவது அல்லது மர்மஸ்தானத்தில் முடிமுளைப்பது அல்லது கனவில் இந்திரியம் வெளிப்படுவது போன்றவற்றால் ஏற்படுகிறது. கூடுதலான ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படுதல் எனும் காரணமும் உண்டு.

ஆக ஒருவனுக்கு இக் காரணிகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டு விட்டால் அவன் பருவ வயதை அடைந்தவனாகிறான்.



ரமழானின் சிறப்புக்கள்

* நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவர்களுக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.

* அல்லாஹ் தனது சுவர்க்கத்தை ஒவ்வொரு நாளும் அழகுபடுத்துகிறான் எனது நல்லடியார்கள் தம் கஷ்டங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் அமல்களில் ஈடுபடுவதற்கும் பிறகு உன்பக்கம் வருவதற்கும் நெருங்கி விட்டார்கள் என அதை நோக்கிக் கூறுகிறான்.

* மூர்க்கத்தனமான ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள்.

* ஆயிரம் மாதங்களை விட சிறப்பான மகத்துவமிக்க ஓர் இரவு இதில் உள்ளது.

* ரமழானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது.

* ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகத்திலிருந்து சிலரை விடுதலை செய்கிறான்.

* ரமழானில் செய்கின்ற உம்ரா ஹஜ்ஜுக்கு சமமாகும்.

“எவர் ரமழானில் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடன் நோன்பு நோற்கின்றாரோ அவர் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்” (புகாரி, முஸ்லிம்)

“ஆதமுடைய மகன் ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்குகள் வரை கூலி கொடுக்கப்படுகின்றது. அல்லாஹ் கூறுகிறான்: நோன்பைத் தவிர ஏனெனில் நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன். (இப்னுமாஜா)

நோன்பை விடுவதற்கு சலுகைகள் அளிக்கப்பட்டவர்கள்

* நோயாளி:- தனது நோய் நீங்கி விடுமென எதிர்பார்க்கிறான் ஆயினும் நோன்பு நோற்பது அவனுக்கு கஸ்டமாக உள்ளது. இப்படிப்பட்டவர் நோன்பை விட சலுகை வழங்கப்படுகின்றான். பின்னர் விடுபட்ட நோன்பை கழாசெய்ய வேண்டும். எனினும் தனது நோய் நீங்கி விடுமென எதிர்பார்க்க முடியாத நிரந்தர நோயாளி நோன்பு நோற்பது கட்டாயமில்லை அவன் ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு (சுமார் 550g) உணவு வழங்க வேண்டும்.

அல்லது விடுபட்ட நோன்புகளின் எண்ணிக்கை அளவு ஏழைகளை அழைத்து (ஒரே நேரத்தில்) உணவு வழங்க வேண்டும்.

* பயணி:- ஒரு பயணி தனது ஊரிலிருந்து புறப்பட்டுத் திரும்பி வரும் வரை நோன்பை விட்டுவிட சலுகையளிக்கப்படுகின்றான். இப் பயணத்திற்குரிய தூரம் 80 கி. மீ. அல்லது அதற்கு கூடுதலாக இருக்க வேண்டும்.

எந்த நோக்கத்திற்காக பயணம் மேற்கொண்டானோ அந்த நோக்கம் முடிந்த பின் அங்கு தங்குவதில்லை என்ற எண்ணத்துடன் அங்கு இருக்கும் வரை அவன் பயணத்திலேயே இருக்கின்றான்.

* கர்ப்பிணி, பாலூட்டும் தாய்:-

இவ்விருவரும் தனக்கோ, தன் குழந்தைக்கோ இடையூறு ஏற்படும் எனப்பயந்தால் நோன்பை விட அனுமதிக்கப் படுகின்றார்கள். காரணம் நீங்கி விட்ட பின்னர் விடுபட்ட நோன்பை அவர்கள் கழாச் செய்ய வேண்டும்.

* முதியவர்:- இவர் நோன்பு பிடிப்பது சிரமமாக இருந்தால் நோன்பு விட சலுகை அளிக்கப்படுவார் ஆனால் இவருக்கு கழாகிடையாது. மாறாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு அவர் உணவு கொடுக்க வேண்டும்.

நோன்பை முறிப்பவை.

உண்பது, குடிப்பது, மறதியாக உண்டால், குடித்தால் அது நோன்பை முறிக்காது. “யாரேனும் நோன்பிருந்த நிலையில் மறதியாக உண்டால் குடித்தால் அவர் நோன்பை (முறிக்காமல்) நிறைவு செய்யட்டும்” எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

மூக்கு வழியாக தண்ணீர் வயிற்றினுள் சென்று விடுவதும், நரம்பு வழியாக உணவு, இரத்தம் செலுத்துவதும் நோன்பை முறிக்கும் காரணம் நோன்பாளிக்கு உணவாக அமைகிறது.

உடலுறவு கொள்ளுதல்:- நோன்பாளி உடலுறவு கொண்டால் நோன்பு முறிந்து விடும். அவர் நோன்பை கழாச் செய்வதுடன் பரிகாரமும் செய்ய வேண்டும். அதாவது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும் அதற்கு இயலவில்லை எனில் இரண்டு மாதம் தொடர்ந்து நோற்க வேண்டும்.

இவ்விரண்டு மாதங்களில் மார்க்க ரீதியான அல்லது உடல் ரீதியான காரணமின்றி நோன்பை விட்டு விடக்கூடாது. மார்க்க ரீதியான காரணமென்பது ஹஜ் பெருநாளும், அதை அடுத்து வரக்கூடிய அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களுமாகும். உடல் ரீதியான காரணமென்பது வியாதி, நோன்பை விட வேண்டு என்ற நோக்கமின்றி பயணம் செய்தல் ஆகியவையாகும்.

எந்தக் காரணமுமின்றி தொடராக ஒருவன் நோன்பு நோற்பதை விட்டுவிட்டால் அது ஒரு நாளாயினும் சரி தொடர் உண்டாவதற்காக அவன் மீண்டும் புதிதாகத் தொடர்வது அவசியமாகும். தொடராக நோற்க இயலவில்லை எனில் 60 ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.

விந்து வெளிப்படுதல்: முத்தமிடுவது, சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்ற காரணங்களால் இந்திரியத்தை வெளிப்படுத்துவது இவ்வாறு செய்பவன் நோன்பை கழாச் செய்ய வேண்டும். பரிகாரம் தேவை இல்லை.

கனவின் மூலம் விந்து வெளியானால் நோன்பு முறியாது.

இரத்தத்தை வெளியேற்றுதல்: அதாவது இரத்தம் குத்தி எடுப்பதற்காகவோ, இரத்த தானம் செய்வதற்காகவோ இரத்தத்தை வெளியேற்றுதல்.

(இதில் கருத்து வேறுபாடு உள்ளது) இரத்தப் பரிசோதனைக்காக எடுக்கப்படும் குறைவான இரத்தம் நோன்பை முறிக்காது.

இவ்வாறே சுயவிருப்பமின்றி மூக்கிலிருந்தும், காயம், பல் பிடுங்குதல் போன்வற்றால் வெளியேறும் இரத்தம் நோன்பை முறிக்காது.



நோன்பின் சுன்னத்துக்கள்

1. ஸஹர் செய்தல்: ‘ஸஹர் உணவு உண்ணுங்கள் நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது. என நபி (ஸல்) அவர்கள் பகன்றார்கள்.” (புகாரி முஸ்லிம்)

2. விரைந்து நோன்பு திறத்தல்: சூரியன் மறைந்து விட்டது என உறுதியாகத் தெரிந்து விட்டால் விரைந்து நோன்பு திறந்திட வேண்டும்.

3. துஆச் செய்தல்: நோன்பு நோற்றிருக்கும் போது குறிப்பாக நோன்பு துறக்கும் சமயம் துஆச் செய்ய வேண்டும். ஏனெனில் மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

“நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ பயணியின் துஆ என்பது நபி மொழி” (பைஹறி)

நோன்பாளி இரவுத் தொழுகை தொழுவதும் அவசியமாகும். “எவர் ரமழான் இரவில் ஈமானுடனும், நற்கூலி கிடைக்கும் எண்ணத்துடனும் நின்று வணங்குகின்றாரோ அவரது முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” நபி மொழி (புகாரி முஸ்லிம்)

தராவிஹ் தொழுகையை இமாமுடன் முழுமையாக நிறைவேற்றுவது அவசியமாகும். “யார் தனது இமாமுடன் அவர் தொழுகையை முடிக்கின்ற வரை நின்று வணங்குகின்றாரோ அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய கூலி எழுதப்படுகிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இன்னும் ரமழானில் அதிகமதிகம் தர்மம் செய்வது சிறந்தது.

“நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள், “ரமழானில் செய்யப்படும் தர்மமே சிறந்த தர்மமாகும்” (திர்மிதி)

மேலும் ரமழானில் குர்ஆன் ஓதுவதில் மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்வதும் அவசியமாகும். ஏனெனில் ரமழான் மாதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும். குர்ஆன் ஓதுபவருக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மைகள் உண்டு.



தராவீஹ் தொழுகை

தராவீஹ் என்பது ரமழான் இரவில் ஜமாத் ஆகத் தொழும் தொழுகையாகும். அதன் நேரம் இஷாத் தொழுகைக்கு பின்னிருந்து அதிகாலை உதிக்கும் வரையுமாகும். ரமழான் இரவில் தொழும்படி நபி (ஸல்) ஆர்வமூட்டி உள்ளார்கள். தராவீஹ் 11 ரக்அத்துகள் தொழுவதே நபி வழியாகும். ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் ஸலாம் கொடுக்க வேண்டும். (11 க்கு மேல் அதிகப் படுத்தினால் குற்றமில்லை.)

இத் தொழுகையை நடத்துவதில் சுன்னத்தான முறை தொழுகையாளிகளுக்குச் சிரமம் ஏற்படாத அளவு நீட்டி நிதானமாகத் தொழுவதாகும்.

குழப்பம் ஏற்படாது என்றிருந்தால் தராவீஹ் தொழுகைக்கு பெண்கள் பள்ளிக்கு வருவதில் குற்றம் இல்லை. எனினும் தம் அலங்காரங்களை வெளிப்படுத்தாமல் நறுமணம் பூசாமல், பர்த்தாவுடன் வருவது ஷர்த்தாகும்.

எனவே இஸ்லாம் அனைத்து விடயங்களையும் நமக்கு இலேசாகவே ஆக்கித் தந்துள்ளது. ரமழான் காலங்களில் (நாட்களில்) இங்கு குறிப்பிட்ட விடயங்களை அதிகமதிகம் பின் பற்ற தடுத்தவற்றை தடுத்து நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்பாளிப்பானாக.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.