
துபாய், நவ.26-
ஐக்கிய அரபு அமீரகங்களின் ஒன்றான துபாயில் ஆட்சியாளராக இருப்பவர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம். இவர் அமீரக பிரதமர் மற்றும் துணை அதிபர் பதவியும் வகிக்கிறார். கவிதை எழுதுதல், குதிரை பந்தயத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
துபாய் ஆட்சியாளர், குதிரை பந்தயத்தில் பங்கேற்கும் போது, அமீரக தேசிய கொடி நிறத்திலான ஹெல்மெட்டை பயன்படுத்தி வந்தார். இந்த ஹெல்மெட்டை ஆட்சியாளர் நீண்ட காலம் பயன்படுத்தி இருக்கிறார். அந்த ஹெல்மெட்டை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை ஏழை மக்களுக்கு செலவிட விரும்பினார்.
இதைதொடர்ந்து அவர் பயன்படுத்திய ஹெல்மெட் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அமீரகத்தை சேர்ந்த பெரும் தொழில் அதிபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஏலத்தில் போட்டி கடுமையாக இருந்தது. இறுதியில் அமீரகத்தை சேர்ந்த ஒருவர் துபாய் ஆட்சியாளர் பயன்படுத்திய ஹெல்மெட்டை 24.05 மில்லியன் திர்ஹாமுக்கு (இந்திய மதிப்பு சுமார் ரூ. 43 கோடியே 20 லட்சம்) ஏலம் எடுத்தார்.
அமீரகத்தில் ஒரு ஹெல்மெட் 200 திர்ஹாம் முதல் 2 ஆயிரம் திர்ஹாம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் துபாய் ஆட்சியாளர் பயன்படுத்திய இந்த ஹெல்மெட் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போய் இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
0 comments:
Post a Comment