Comments

நோன்பு

ரமலான் முதல் பத்தின் சிறப்புகள்...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
 
அருள் நிறைந்த ரமலான் மாதத்தின் நோன்புகளை நோற்றுவரும் நாம் இந்த மாதத்தில் முதல் பத்தில் செய்யவேண்டிய மிக முக்கியமான அமலை இந்த ஆக்கத்தில் பார்க்கவிருக்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
ஆதார நூல்; இப்னு குஜைமா எண் 191
.
இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் ரமலானை மூன்றாக பிரித்து அந்த மூன்றிலும் மிக முக்கியமான பலன்கள் இருப்பதை சொல்லிக்காட்டுகிறார்கள். அந்த பலன்களை அடைய நாம் செய்யவேண்டியது என்ன?
முதல்பத்தில் இதுவரை நாம் அடைந்த அருட்கொடைக்கு நன்றி கூறுவதும், அல்லாஹ்வின் அருளை வேண்டுவதும்.
 
நமது நம் முஸ்லிம் சமுதாயத்தில் அல்லாஹ் உங்களுக்கு செய்த அருட்கொடை என்ன என்று கேட்டால் செல்வத்தைத்தான் சொல்லிகாட்டுவார்கள். பெரிய பங்களாவை எழுப்பி விட்டு அதன் நெற்றியில் 'இது என் இறைவனின் அருட்கொடை' என்று எழுதியிருப்பார்கள். அப்படியாயின் இதுவரை அவர்கள் வாழ்வில் அனுபவித்த எதுவும் அவர்களுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
 • மாட மாளிகைகளில் வாழ்பவர்களில் பலர் மன நிம்மதியின்றி உறக்கமின்றி தவித்தபோது இவன் குடிசையில் சுகமாக உறங்கினானானே அந்த அருட்கொடை இவனுக்கு பெரிதாக தெரியவில்லை.
 • எத்துணையோ பேர் வீடின்றி ரோட்டிலே வாசம் செய்துகொண்டிருந்தபோது இவனுக்கு ஒரு கூட்டை தந்தானே இறைவன்.அது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
 • பெட்டி பெட்டியாக பணமும்- கட்டி கட்டியாக தங்கமும் வைத்துள்ள ஒரு செல்வந்தன் ஆங்கில எழுத்தில் உள்ள அத்துணை நோய்களையும் தாங்கி அவதிப்பட்டுக்கொண்டிருந்தபோது அன்றாடம் காய்ச்சியான இவன் காய்ச்சல் கூட இன்றி இருந்தானே அது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
 • அத்துணை வசதிகள் இருந்தும் வெறும் கூழ் மட்டுமே குடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் பல செல்வந்தர்கள் இருக்க, சின்ன எலி முதல் பென்னம்பெரிய பிராணியையும் முழுங்கிவிட்டு இருமுறை தரையில் புரண்டுவிட்டு பின்பு சாவகாசமாக ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு போல், சாதாரண கஞ்சி முதல் கனமான ஒட்டக இரைச்சிவரை கிடைத்ததை உள்ளே தள்ளி விட்டு 'ஏவ்' என்று ஏப்பமிட்டு சாதாரணமாக இவன் வாழ்ந்தது இவனுக்கு அருட்கொடையாக தெரியவில்லை.
எது மட்டும் அருட்கொடையாக தெரிகிறது எனில் செல்வம் மட்டுமே அருட்கொடையாக தெரிகிறது. செல்வமும் அல்லாஹ்வின் அருட்கொடைதான். ஆனால் அதுமட்டுமே அருட்கொடை என்று எண்ணிவிடக்கூடாது. அல்லாஹ் நமது உடலில் அமைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அருட்கொடைதான். 'நிழலின் அருமை வெயிலில் இருந்தால்தான் தெரியும்' என்பார்கள். அதுபோன்று முழுமையான உடலமைப்பை பெற்ற ஒருவனுக்கு அவனது உறுப்புகளின் மகிமை புரிவதில்லை. நம்முடைய ஒவ்வொரு உறுப்பும் எப்படிப்பட்ட அருட்கொடை என்று புரிய வேண்டுமெனில், மாற்றுத் திறனாளிகளிடம் கேட்டால் தெரியும். கண் இன்றி அவர்கள் படும் கஷ்டங்கள்-செவிப்புலன் இன்றி அவர்கள் படும் துன்பங்கள்- பேசும் புலன் இன்றி அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள்- பிடிக்க கையின்றி, நடக்க கால்களின்றி அவர்கள படும் பாடுகள். இதையெல்லாம் நாம் கவனித்துப்பார்த்தால் அல்லாஹ் நமக்கு எப்படியெல்லாம் தனது அருளை வாரி வழங்கியிருக்கிறான் என்பதை புரிந்துகொள்ளலாம். செல்வம் மற்றும் நம் உடலமைப்பு மட்டுமன்றி,
 • ஒரு பெற்றோருக்கு அவர்களின் பெயரை காக்கும் வகையில் ஸாலிஹான குழந்தை கிடைப்பது அல்லாஹ்வின் அருட்கொடை.
 • பிள்ளைகளுக்கு இஸ்லாமிய நன்னெறி போதித்து வளர்க்கும் பெற்றோர் கிடைப்பது அல்லாஹ்வின் அருட்கொடை.
 • ஒரு கணவனுக்கு மார்க்கத்தை கற்ற சிறந்த மனைவி அமைவது அல்லாஹ்வின் அருட்கொடை.
 • ஒரு பெண்ணுக்கு மது-மாது-சூது-புகை-சினிமா உள்ளிட்ட தீமைகளை செய்யாத இறையச்சமுடைய கணவன் அமைவது அல்லாஹ்வின் அருட்கொடை.
 • கடுகளவும் பெருமையின்றி, சுயநலமின்றி சமுதாயத்தின் நலம் காக்கும் ஒரு வழிகாட்டி அமைவதும் அல்லாஹ்வின் அருட்கொடை.
 • முட்டாள்களுக்கு மத்தியில் கற்றவனின் கல்வி அதிலும் குறிப்பாக இஸ்லாமிய கல்வி அல்லாஹ்வின் அருட்கொடை.
 • இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாம் முஸ்லிம்களாக பிறப்பதற்கும், வாழ்வதற்கும் அல்லாஹ் அருள் புரிந்தானே இது மிகப்பெரிய அருட்கொடை. எப்படியெனில், உலகில் உள்ள அத்த்துனை பெரிய கல்விகளையும் கற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியில் வீற்ற போதும் தன்னை படைத்த அந்த பரம்பொருளை அறியும் அந்த பகுத்தறிவில்லா முட்டாள்களாக பலகோடி பேர் இருக்கும் நிலையில், ஏட்டுப்படிப்பை ஊறுகாய் அளவுக்கு கற்ற இந்த முஸ்லிம் சமுதாயம் தன்னுடைய இறைவன் யார் என்பதை தெளிவாக விளங்கிவைத்துள்ளதே! கல்லையும்- மண்ணையும்-மரத்தையும்-பாம்பையும்-பல்லியையும் இப்படி மனிதனை விட கீழான படைப்புகளை இறைவனாக கருதி வழிபடும் மக்களுக்கு மத்தியில், இறைவன் யார்? அவன் வல்லமை என்ன? என்பதை விளங்கி அவனை தவிர வேறு எந்த படைப்பினங்களுக்கும் தலைவனங்கமாட்டோம் என்று அறுதியிட்டு உறுதியாக சொல்லும் நெஞ்சுரத்தை தந்தானே வல்ல ரஹ்மான். இதுதான் மிகப்பெரிய அருட்கொடை.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு)இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு
ஆதாரம்;புஹாரி எண் எண் 6412 .
இந்த பொன்மொழியில் நபி[ஸல்] அவர்கள் இரு முக்கியமான அருட்கொடை பற்றி கூறுகிறார்கள். ஆரோக்கியம் என்பது ஒரு அருட்கொடை. அந்த ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிவிக்கும், மது-மாது-புகை போன்ற தீய பழக்கவழக்கங்களை விட்டொழிக்கவேண்டும். மேலும், உழைப்பிற்கு ஏற்ப உடம்பிற்கு ஓய்வும் அளிக்கவேண்டும் . ஒய்வு என்ற பெயரில் சினிமா-டிராமா-கிரிக்கெட்-சூதாட்டம் போன்ற தீமைகள் செய்வதையும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.
எனவே அன்பானவர்களே! இதுவரை இறைவன் நமக்களித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம். இனியும் அவனது அருள் நிழலில் வாழ இந்த புனித ரமலானின் முதல் பத்தை பயன்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.

About Unknown

0 comments:

Post a comment

Powered by Blogger.