Comments

துபாய் ஏர்-ஷோ: சந்தையில் விளாம்பழம் வாங்குவது போல விமானங்களை வாங்குகிறார்கள்!



துபாய் ஏர்-ஷோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக ஆரம்பமாகியது. சர்வதேச ஏவியேஷன் வர்த்தகத்தில், பாரிஸ் ஏர்-ஷோதான் அதிக அளவில் வர்த்தகம் நடக்கும் இவென்ட் என்று பொதுப்படையாக ஒரு கருத்து உண்டு. அரபு நாட்டு விமான நிறுவனங்கள், அந்தக் கருத்தை உடைக்க, துபாய் ஏர்-ஷோவை இப்போது அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளன.
பொதுவாகவே, போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களின் பெரிய கஸ்டமர்கள் அரபு நாட்டு ஏர்லைன் நிறுவனங்கள்தான். இதனால் அவர்கள், ஐரோப்பா சென்று விமானம் வாங்குவதைவிட, ஐரோப்பிய, அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனங்களை தமது இடத்துக்கு வரச்செய்து வாங்கிக் கொள்வதை கௌரவமாக நினைக்கிறார்கள்.
துபாய் ஏர்-ஷேவின் முதல் நாளான இன்றே, பில்லியன் டாலர்களில் வர்த்தகம் நடந்தது. அரபு விமான நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்த விமானங்களின் எண்ணிக்கையும், செலவிட்ட பணமும் கிறுகிறுக்க வைத்தன.
முதல்நாள் நடந்த வர்த்தகத்தின் பெறுமதி, கிட்டத்தட்ட 200 பில்லியன் (மில்லியன் அல்ல, பில்லியன்) டாலர்! போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்கள் மொத்தம் 573 விமானங்களை முதல்நாளே விற்றுத் தீர்த்தன.
முதல்நாள் வர்த்தகத்தில் முதல் இடத்தில் உள்ளது, சந்தேகத்துக்கு இடமில்லாமல் எமிரேட்ஸ் நிறுவனம்தான். அவர்களுடைய ஹோம் கிரவுண்டில், பலத்தை காட்டாமல் இருப்பார்களா அவர்கள்? 200 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.
இவர்களது ஆர்டரில், அதிக எண்ணிக்கையில் விமானங்களை அமெரிக்க போயிங் நிறுவனமே விற்றிருக்கிறது. போயிங் 777X ரகத்தில் 150 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது எமிரேட்ஸ். இந்த ஆர்டரின் மொத்த மதிப்பு, 99 பில்லியன் டாலர்.
அடுத்த இடத்தில் உள்ளது, எதியாட் ஏர்வேஸ். இவர்கள், 67 பில்லியன் டாலருக்கு ஷாப்பிங் செய்திருக்கிறார்கள். இவர்களது கடைக்கண் பார்வை, ஏர்பஸ் பக்கமே அதிகம் படிந்தது. ஏர்பஸ் குடும்பத்தை சேர்ந்த 117 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் இவர்கள். போயிங் நிறுவனத்திடம் 82 விமானங்களை வாங்கும் எதியாட், 294 விமான எஞ்ஜின்களுக்கும் ஆர்டர் கொடுத்துள்ளது.
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் கலத்துகொண்டு, ‘மிக சூடாக’ அங்கிருந்து கிளம்பிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரோன், நேரே வந்து துபாய் ஏர்-ஷோவில் இறங்கினார்.
துபாயில் சூடாக இல்லை அவர். காரணம், ஐக்கிய அரபு அமீரகம் தமது ராணுவத்துக்காக 60 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. அந்த ஆர்டரை பெறுவதற்காக பிரிட்டிஷ், பிரெஞ்ச் நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. பேரம் இன்னமும் படியவில்லை. நாளை எப்படியும், இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டு விடும்.
ஆர்டரை பிரெஞ்ச் நிறுவனம் தட்டிப் போகாமல் தடுப்பதற்காக, பிரிட்டிஷ் பிரதமரே நேரில் வந்திருக்கிறார்.
பிரிட்டனுக்கு ஏர்-ஷோவின் முதல் நாளில் கிடைத்த சந்தோஷம், எதியாட் ஏர்வேஸ், பிரிட்டிஷ் விமான எஞ்ஜின் தயாரிப்பு நிறுவனம் ரால்ஸ்-ராய்ஸிடம் (Rolls-Royce), 50 விமான எஞ்ஜின்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இவற்றின் மதிப்பு, 5 பில்லியன் டாலர்.
பில்லியன் கணக்கில் வர்த்தகம் நடக்கும் துபாய் ஏர்-ஷோவில், சிவில் விமான வர்த்தகத்தில் ‘பெரிய தலைகள்’ பலரை காண முடிந்தது. அதைவிட தத்தமது நாட்டு நிறுவனங்களை ஆதரிக்க, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், தமது வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் பலரை களத்தில் இறக்கி விட்டுள்ளன.
‘ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை போல’ நம்ம கனடாவும் களத்தில் உள்ளது.
கனடா, மொன்ட்ரியோலை தலைமையகமாக கொண்ட Bombardier Aerospace பூத்களை அமைத்துள்ளது. இவர்கள் சிறிய ரக, ரீஜனல் ஜெட் தயாரிப்பாளர்கள். (ஒரு விதத்தில் சொல்லப்போனால், போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது, இந்த கனேடிய நிறுவனம்தான்)










About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.