Comments

பாலஸ்தீன குழந்தைகள் சித்திரவதை!







பாலஸ்தீனிய குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். 30 முன்னாள் படைவீரர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இஸ்ரேலிய படைவீரர்கள் செய்த எண்ணற்ற கொடுமைகளை விவரிக்கிறது.

2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரேக்கிங் சைலன்ஸ் (மௌனத்தை கலைக்கிறோம்) என்ற முன்னாள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கான அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இப்போதைய மற்றும் முன்னாள் இஸ்ரேலிய படைவீரர்கள் பங்கேற்ற அல்லது கண்ணுற்ற கொடுமைகளை பற்றி விவரிக்கும் 850 நிகழ்வுகளை திரட்டியிருக்கிறார்கள். இஸ்ரேலிய படைவீரர்கள் மீது கல்லெறியும் மைனர் குழந்தைகளை பிடித்து அடைத்து வைத்த நிகழ்வுகள், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலிய கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கவச வாகனப் படையின் முதன்மை சார்ஜண்ட் ஒருவர் தனது பணியை “மக்கள்  கட்டுப்பாடு” என்று அழைக்கிறார். பாலஸ்தீனிய கிராமங்களுக்குள் போய், தங்களது இருப்பை உணர்த்துவதுதான் அவரது படைப்பிரிவின் வேலை. அங்கு வசிக்கும் மண்ணின் மைந்தர்களிடம் அந்த பகுதியில் அவர்களுக்கு உரிமை இல்லை என்பதை நிலை நாட்டுவதுதான் படைப்பிரிவின் பணி.

“ஒன்று அல்லது இரண்டு ரோந்து அணியினர் கிராமங்களுக்குள் போய் அட்டகாசம் செய்வார்கள். ஒரு படைப்பிரிவே அனுப்பப்பட்டு கிராமத்து தெருக்களில் அணிவகுத்து சென்று கலவரத்தை தூண்டுவார்கள்” என்கிறார் அந்த முதன்மை சார்ஜண்ட். அவரது படைப்பிரிவு தலைவரின் நோக்கமே மக்களை காலடியில் நசுக்கி வைப்பதன் மூலம் தங்கள் மீது கல் எறிய நினைக்கக் கூட முடியாமல் செய்வதுதான்.

வெஸ்ட் பேங்கில் உள்ள காலந்தியா என்ற இடத்தில் பாலஸ்தீனிய குழந்தைகளை சூழ்ந்து கொண்ட ஒரு குழுவினர் அவர்களை மரத்தடிகளால் அடித்து துவைத்ததை ஒரு வாக்குமூலம் விவரிக்கிறது. “மக்களை தரையில் கீழே விழ வைத்த பிறகு படைவீரர்கள் போய் அவர்களை தடிகளால் அடிப்பார்கள். மெதுவாக ஓடுபவர் அடி வாங்குவார் என்பதுதான் விதி” என்கிறார் பொறியாளர் படைப்பிரிவின் ஒரு முதன்மை சார்ஜண்ட்.

6 வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் காவலில் வைக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, உணவும் நீரும் கொடுக்கப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டதை அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. எல்லையைத் தாண்டி இஸ்ரேலுக்குள் போக முயற்சித்ததற்காக 12-14 வயதுடைய குழந்தைகளை கைது செய்ததாக சொல்லும் துணை ராணுவப் படை பிரிவின் முதன்மை சார்ஜன்ட் ஒருவர், குழந்தைகளை பயங்கரவாதிகளுக்கு துணை புரிபவர்களாகவே நடத்த வேண்டும் என்று தனக்கு சொல்லித் தரப்பட்டது என்கிறார்.

“பிடிக்கப்பட்டவர்களில் ஒருவரை இரண்டு படைவீரர்கள் அடிப்பதை அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார். எனது நினைவு சரியாக இருந்தால் பிடித்து வைக்கப்பட்டவர்களுக்கு 16 வயதுதான் இருக்கும்” என்றார் அவர். பொழுது போகாமல் போர் அடித்தால் கடைகளையும் கட்டிடங்களையும் அடித்து உடைப்பதன் மூலம் வேண்டுமென்றே கலவரங்களை அவரது படைப்பிரிவு தூண்டியது என்கிறார் அவர்.

இஸ்ரேலிய வீரர்கள் ஒரு மசூதிக்கு வெளியில் பொது மக்களுக்காக காத்திருந்து ரப்பர் குண்டுகளை சுடுவதன் மூலம் கலவரத்தை தூண்டிய நிகழ்வை பற்றி அவர் விவரிக்கிறார். பாலஸ்தீனிய குழந்தைகள் கற்களை வீசினால் அவர்களை பிடித்து மனித கேடயங்களாக பயன்படுத்துவது வழக்கம் என்கிறார் அவர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பை தொடர, முழு உலகமும் அமெரிக்காவிடம் சரணடைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மேற்கு கடற்கரையிலும் காசாவிலும் நடக்கின்றன என்பதற்கான முக்கிய ஆதாரங்கள் இவை.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.