Comments

தமிழக செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம் இன்று நடக்கிறது..!


 

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் வழங்கும் முகாம் இன்று நடக்கிறது என்று மாவட்ட வருவாய் அதிகாரி மீனாட்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;–

கல்விக்கடன் வழங்கும் முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் உயர்கல்வி கற்க கல்விக்கடன் பெறுவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் இன்று(சனிக்கிழமை) மற்றும் வருகிற ஆகஸ்டு 8, 22–ந் தேதி ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கல்விக்கடன் வழங்கும் முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கியாளர்களும் கலந்து கொண்டு தங்கள் சேவைப்பகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பெரம்பலூர் மற்றும் வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளும், வருகிற 8–ந் தேதி அன்று வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்களும், 22–ந் தேதி அன்று பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு கவுண்ட்டர்கள்

மாணவ, மாணவிகளின் வசதிக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு வங்கிகளின் சார்பில் தனித்தனியாக சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த கல்விக்கடன் முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவராகவும், தொழிற்கல்வி, உயர்கல்வி பயிலுபவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எந்த மாவட்டத்திலும் கல்வி பயிலலாம். மாணவ, மாணவிகள் தேவைப்படுகின்ற ஆவணங்களை அன்றைய தினமே கொண்டு வந்தால் உடனே கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெற தமிழக அரசு வழங்கி வரும் கல்வி உதவித்தொகை குறித்த விவரங்கள் குறித்தும், விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகங்களின் விவரங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் விளக்கம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ்கள், கல்லூரி கட்டண விவர கடிதம், பெற்றோரின் ஊதிய சான்றிதழ், வருமான சான்றிதழ், மருத்துவக்கல்வி, பொறியியல் கல்விக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிக்கான சேர்க்கை ஆணை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பங்கள்

இந்த முகாமிற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட கலெக்ட அலுவலக இரண்டாம் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஏதேனும் உதவி தேவைப்படுபவர்களுக்காக ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கல்விக்கடன் பெற்று உயர்கல்வி பயில வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மின் ஆளுமை திட்ட ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.