Comments

தமிழக செய்திகள்

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

 செயற்கைக்கோள் படம்: உதவி: இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம்.
 
 
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், "வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை தொடரும். கடலூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி சென்னையில் மொத்தம் 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் தாம்பரத்தில் அதிகபட்சமாக 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கத்தில் 47 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" என்றார்.
 
தொலைதொடர்பு சேவை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாத மழையால் தொலைதொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பார்தி டெலிவென்சூர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
போக்குவரத்து பாதிப்பு:
 
நகரின் பிரதான சாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் புறநகரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
 
சென்னை எழும்பூரிலிருந்து செல்லும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் ரத்து குறித்து தகவலறிய ஹெல்ப் லைன் எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
ஓடுதளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் விமான சேவையும் முடங்கியுள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை விமானங்கள் இயக்கப்படாது என ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
 
மக்களவையில் விவாதம்:
 
தமிழக மழை வெள்ள பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்கப்பட்டது. அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, "கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் மழை பெய்துள்ளது. வேளச்சேரி, வட சென்னை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை மக்களின் துயரத்தை நாடாளுமன்றம் உணர்ந்துள்ளது. நிலவரம் குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தமிழக வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட ராணுவம், கப்பல்படை அனுப்பப்பட்டுள்ளன. சென்னை மக்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்" என்றார்.



About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.