Comments

மாணவர்கள் நலன் கருதி 10, 12-வது வகுப்பு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை அமல்

மாணவர்கள் நலன் கருதி 10, 12-வது வகுப்பு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை அமல்

சென்னை, ஜன.1-
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளின்போது வினாத்தாள் கொண்டு செல்வதில் புதிய முறை கடைப்பிடிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் 25-ந்தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி முடிகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து 50 மையங்களில் 11 லட்சத்து 10 ஆயிரம் மாணவ-மாணவிகளும், பிளஸ்-2 தேர்வை 2 ஆயிரத்து 500 மையங்களில் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர்.

தேர்வு முறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. விடைத்தாளில் ரகசிய கோடு, பதிவு எண், மாணவர் பெயர் ஆகியவை முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளை பொறுத்தவரை மெயின் ஷீட்டில் பக்கங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. எனவே பெரும்பாலும் மாணவர்கள் கூடுதல் விடைத்தாள் பெற தேவையில்லை.

இந்த நிலையில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் வழக்கம்போல இந்த ஆண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. வழக்கமாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் இருக்கிறதோ அந்த மாவட்டத்தில் உள்ள வினாத்தாள் பாதுகாப்பு மையத்தில் இருந்துதான் வினாத்தாள் போக வேண்டும். அவ்வாறு செல்வதால் சில இடங்களில் வெகுதூரத்தில் இருந்து கொண்டு செல்லவேண்டி உள்ளது. அதில் கடுமையான பொறுப்பும் உள்ளது. வினாத்தாள் தொலையாமல் இருக்கவேண்டும். வினாத்தாள் வெளியாகாமல் இருக்கவேண்டும்.

உதாரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் கடைசியில் உள்ள ஒரு தேர்வு மையம் வேலூர் மாவட்டத்திற்கு மிக அருகாமையில் இருக்கும். இந்த பள்ளிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் வருவது என்றால் மிக நேரம் ஆகும். ஆனால் வேலூர் மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் கொண்டு வருவது மிக எளிதாகும்.

அப்படிப்பட்ட தேர்வு மையங்களை கண்காணித்து அருகில் உள்ள வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் இருந்து வினாத்தாள் கொண்டு வர அரசு தேர்வுத்துறை முடிவு செய்து உள்ளது. இதனால் வினாத்தாள் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.